ரஞ்சி கோப்பை 2022-23: தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிரா!

Updated: Fri, Dec 30 2022 21:35 IST
Ranji Trohpy 2022 -23: Delhi vs Tamil Nadu ends in a draw! (Image Source: Google)

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2022-23ஆம் ஆண்டுக்கான சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழ்நாடு  - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் துருவ் ஷோரே 67 ரன்களும், ஜாண்டி சிந்து 57 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் பிரன்ஷு விஜய்ரன்னும் அரைசதம் அடித்தார். பிரன்ஷு 58 ரன்கள் அடிக்க, லலித் யாதவ் 40  ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி 303 ரன்கள் அடித்தது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணியில் பாபா அபரஜித் 57 மற்றும் பாபா இந்திரஜித் 71 ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். விஜய் சங்கர் 52 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் பிரதோஷ் பால் மிகச்சிறப்பாக விளையாடி சதமடித்தார். அபாரமாக விளையாடிய பிரதோஷ் 124 ரன்களை குவித்ததன் மூலம் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி.

124 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் துருவ் ஷோரே இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து 70 ரன்கள் விளாசினார். சிறப்பாக பேட்டிங்  ஆடிய வைபவ் ராவல் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் அனைவருமே ஆட்டமிழந்ததால், வைபவ் ராவல் 95 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தும் கூட அவரால் சதமடிக்க முடியவில்லை. இதனால் 2ஆவது இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

டெல்லி அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. எனவே தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 139 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால் தமிழ்நாடு அணியால் இலக்கை அடிக்க முடியவில்லை. இதனால் 6 ஓவரில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் அடிக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை