ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பரோடா, சண்டிகர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சண்டிகார் அணியில் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக கேப்டன் மேனன் ஓரா 43 (45), ராஜ் பவா 32 (80), ஆகியோர் ரன்களை சேர்த்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 168/10 ரன்களை மட்டுமே சேர்த்தது. அபிமன்யூ ராஜ்புட் 5/47 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து பரோடா அணி முதல் இன்னிங்ஸ் களமிறங்கியது. ஓபனர் ஜியோத்ஸ்னில் சிங் 96 (185), ஒன் டவுன் வீரர் ப்ரத்யூஸ் குமார் 43 (130) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்திருந்தார்கள்.
அடுத்து விஷ்ணு சோலாங்கி அபாரமாக விளையாடி 103 (161) ரன்கள் குவித்து அசத்தினார். இவர் தற்போதுவரை ஆட்டமிழக்கவில்லை. அவருடன் சேத் 18 (22) விளையாடி வருகிறார். இதனால், பரோடா அணி தற்போதுவரை 398/7 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
விஷ்ணு சோலாங்கியின் மகள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இருப்பினும், அந்த சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, உடனே ரஞ்சி அணிக்கு திரும்பி, எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் விளையாடி சதம் அடித்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோலாங்கி கிரிக்கெட் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. இந்த நெகிழ்ச்சிகரமான விஷயத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து, சோலங்கிக்கு வாழ்த்துக்களையும், ஆறுதல்களையும் தெரிவித்து வருகிறார்கள்