ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை 204 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!

Updated: Fri, Jan 24 2025 22:18 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் நேற்று (ஜனவரி 23)முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு முகமது அலி மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். முகமது அலி 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பாபா இந்திரஜித்தும் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார். 

அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து அசத்தியதுடன் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.  பின்னர் களமிறங்கிய வீரர்களும் விக்கெட்டுகளை இழக்க, தமிழ்நாடு அணி முதல்நாள் 89.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சண்டிகர் அணியில் தொடக்க வீரர் ஷிவம் பாம்ப்ரி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய துஷார் ஜோஷி ரன்கள் ஏதுமின்றியும், மனன் வோரா 34 ரன்களுக்கும், குனால் மஹாஜன் 30 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் பாம்ப்ரி சதமடித்து அசத்திய நிலையில், 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 108 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சண்டிகர் அணி 74.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 97 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழ்நாடு அணியில் முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதில் ஜெகதீசன் 10 ரன்களுடனும், அஜித் ராம் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். சண்டிகர் அணி தரப்பில் நிஷுங்க் பிர்லா மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை