ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!

Updated: Sat, Feb 24 2024 15:04 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பானடு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுச்சுற்றுக்கு, தமிழ்நாடு, சௌராஷ்டிரா, மும்பை, பரோடா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, விதர்பா ஆகிய அணிகள் முன்னேறின. அதன்படி மும்பையில் நடைபெற்றுவரும் இரண்டாவது காலிறுதிச்சுற்றில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 33 ரன்களுக்கும், புபென் லல்வானி 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய முஷீர் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஷாம்ஸ் முலானி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்தது அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய ஆதித்ய தோமர் அரைசதம் அடித்த நிலையில் 57 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 17 ரன்களுக்கும், கொடின் 7 ரன்களுக்கும், மொஹித் அவஸ்தி 2 ரன்களிலும், துஷார் தேஷ்பாண்டா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷீர் கான் இரட்டை சதம் அடித்து அணியை மீட்டதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 18 பவுண்டரிகளுடன் 203 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 383 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பரோடா அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பார்கவ் பத் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இப்போட்டியில் இரட்டை சதமடித்ததன் மூலம் முஷீர் கான் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக இரட்டை சதமடித்த இரண்டாவது இளம் வீரர் எனும் பெருமையை முஷீர் கான் படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மிக இளம் வயதில் இரட்டை சதமடித்த மும்பை வீரர் எனும் சதனையை படைத்துள்ளார்.

முன்னதாக நடைபெற்று முடிந்த ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான், 3 சதங்கள் உள்பட 360 ரன்களைக் குவித்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய பங்கு வகித்தார். அதேசமயம் இவரது சகோதரர் சர்ஃப்ராஸ் கானும் சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமாகி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை