ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்யான் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை முஷீர் கான் 24 ரன்களுடனும், மொஹித் அவஸ்தி ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸை தொடர்ந்தனர். இதில் அவஸ்தி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் அரைசதம் கடந்து விளையாடிய முஷீர் கானை 55 ரன்களிலும், ஷம்ஸ் முலானியை ரன்கள் ஏதுமின்றியும் வெளியேற்றிய சாய் கிஷோர், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் பின்னடைவை சந்தித்த மும்பை அணியும் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூர் - ஹர்திக் தோமர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்திக் தோமர் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் அதிரடியாக விளையாட தொடங்கிய ஷர்துல் தாக்கூர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் பின்னிலைத் தங்கியிருந்த மும்பை அணி இன்றைய நாளின் கடைசி இன்னிங்ஸில் அபார முன்னிலையைப் பெற்றது. 

அதன்பின் 13 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 109 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த தனுஷ் கோட்யான் 74 ரன்களையும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 207 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News