ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் மூன்றாவது காலிறுச்சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சௌரஷ்டிரா அணி 183 ரன்களுக்கு ஆல அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹர்விக் தேசய் 83 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் - விமால் குமார் தொடக்கம் கொடுத்தனர். இதில் விமல் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.  பின்னர் ஜோடி சேர்ந்த சாய் கிஷோர் - பாபா இந்திரஜித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கல் என 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் கிஷோர் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதேசமயம் இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமாரும் அரைசதம் கடந்த கையோடு 65 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணி தரப்பில் சிராக் ஜானி 3 விக்கெட்டுகளையும், ஜெய்தேவ் உனாத்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் 156 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் 4 ரன்களுக்கும், ஷெல்டன் ஜேக்ஸன் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கெவின் ஜிவ்ரஜனி - சட்டேஷ்வர் புஜாரா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜிவ்ரஜனி 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அர்பித் வசவதாவும் 20 ரன்களோடு நடையைக் கட்டினார். 

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய பிரெரக் மான்கட், சிராக் ஜானி, ஜடேஜா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சட்டேஷ்வர் புஜாராவும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் சௌராஷ்டிரா அணி 122 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங், பவுலிங் என ஆல் ரவுண்டராக கலக்கிய தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News