ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய புஜாரா!
இந்திய அணியின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பைப் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று முதல் தொங்கின. இதில் எலைட் குரூப் ஏ பிரிவில் உள்ள சௌராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஜார்க்கண்ட் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷாக்ரா 29 ரன்கள் எடுத்தார். சௌராஷ்டிரா தரப்பில் சிராக் ஜேனி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் ஜயதேவ் உனத்கட் மற்றும் ஆதித்யா ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சௌராஷ்டிரா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 406 ரன்கள் குவித்துள்ளது. சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் சட்டேஷ்வர் புஜாரா சதம் விளாசி அசத்தினார். அவர் 239 பந்துகளில் 157 ரன்கள் (19 பவுண்டரிகள்) எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் பிரேரக் மன்கத் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார். சௌராஷ்டிர அணி ஜார்க்கண்டைக் காட்டிலும் 264 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா இடம்பெறாதது பெரும் விமர்சனங்களாக பேசப்பட்டது. இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புஜாரா இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகறித்துள்ளது.