ரஞ்சி கோப்பை 2023: இரட்டை சதம் விளாசி பிரித்வி ஷா அசத்தல்!

Updated: Tue, Jan 10 2023 17:43 IST
Ranji Trophy: Prithvi Shaw Smacks Unbeaten Double Ton Against Assam (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ஏகப்பட்ட இளம் வீரர்களில் பிரித்வி ஷா முக்கியமான வீரர். இந்திய டெஸ்ட் அணியில் 2018ஆம் ஆண்டே இடம்பிடித்த பிரித்வி ஷா, காயம் காரணமாக இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார். மற்ற இளம் வீரர்களைவிட விரைவில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர் பிரித்வி ஷா. 

அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்து சாதனை படைத்த வீரர் பிரித்வி ஷா. அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இவரை சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கவலை என்று புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் அவரது ஃபிட்னெஸ் பிரச்னையால் தனக்கான வாய்ப்பை இழந்தார். அந்த காலக்கட்டத்தில், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டனர்.

ஆனால் பிரித்வி ஷாவின் பேட்டிங் திறமை அனைவரும் அறிந்ததுதான். இயல்பாகவே மிகச்சிறந்த பேட்டிங் திறமையை கொண்ட அசாத்திய வீரர். அசாதாரணமான இன்னிங்ஸ்களை அவ்வப்போது ஆடி அசத்திவிடுவார். மிகத்திறமையான வீரராக இருந்தும் கூட, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷாவுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை. அதன்பின்னர் எத்தனையோ இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தபோதிலும், பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியிலும் பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. உலக கோப்பைக்காக பிசிசிஐ 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது. அந்த 20 வீரர்கள் பட்டியலில் பிரித்வி ஷா இல்லை என்பது, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் அவர் எடுக்கப்படாதது காட்டுகிறது. 

பிரித்வி ஷாவுக்கு பின்னர் அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிக்கப்படும் நிலையில், பிரித்வி ஷாவுக்கு கம்பேக் சான்ஸ் வழங்கப்படவில்லை. பிரித்வி ஷா தொடர்ந்து இந்திய அணியில் ஒதுக்கப்படும் நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, ரஞ்சி கோப்பை ஆகிய உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக பேட்டிங் செய்து ஸ்கோர் செய்துவருகிறார் பிரித்வி ஷா. 

அந்தவகையில், ரஞ்சி தொடரில் அபாரமான ஒரு இன்னிங்ஸை மீண்டும் ஆடியிருக்கிறார் பிரித்வி ஷா. மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி கவுகாத்தியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து ஒருநாள் முழுக்க எந்த சூழலிலும் தனது பேட்டிங் வேகமும், ஸ்டிரைக் ரேட்டும் குறையாதவகையில் அடித்து ஆடி இரட்டை சதம் விளாசினார். 

முதல் நாளான இன்றைய ஆட்டத்தில் 283 பந்தில் 33 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 240 ரன்களை குவித்து களத்தில் உள்ளார் பிரித்வி ஷா. முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்துள்ளது. அதில் 240 ரன்களை பிரித்வி ஷா அடித்தார்.  தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டுகிறார் பிரித்வி ஷா. அவரை புறக்கணிக்கமுடியாதபடி விளையாடிவருகிறார். ஆனாலும் அவரை அணியில் எடுக்காமல் பிசிசிஐ ஒதுக்குகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை