ரஞ்சி கோப்பை 2024: விவிஎஸ் லக்ஷ்மணனை பின்னுக்குத்தள்ளிய புஜாரா!
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய 6ஆவது லீக் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்து ஜார்கண்டை வெறும் 142 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக குசக்ரா 29, சடாப் நதீம் 27 ரன்கள் எடுக்க சௌராஷ்ட்ரா சார்பில் அதிகபட்சமாக சிராக் ஜானி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 578/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
அந்த அணிக்கு துவக்க வீரர் ஹர்விக் தேசாய் 85 ரன்கள் எடுக்க செல்டன் ஜாக்சன் 54 ரன்கள் குவித்தார். ஆனால் அவர்களை விட 4ஆவதாக களமிறங்கி ஜார்கண்ட் பவுலர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய மொத்த அனுபவத்தையும் காட்டிய நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜாரா 30 பவுண்டரிகளுடன் இரட்டை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 243* ரன்கள் அசத்தினார்.
கூடவே வசவடா 68, பிரேரக் மன்கட் சதமடித்து 104* ரன்கள் எடுத்து சௌராஷ்டிராவை வலுப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து 436 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் விளையாடி வரும் ஜார்கண்ட் 3ஆவது நாள் முடிவில் 140/2 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்ப்பதற்காக போராடி வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் குவித்த 243 ரன்களையும் சேர்த்து முதல் தர போட்டிகளில் 17ஆவது முறையாக இரட்டை சதத்தை அடித்து புஜாரா அசத்தியுள்ளார்.
இதன் மூலம் உலக அளவிலான முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த 4ஆவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 37 இரட்டை சதங்களுடன் டான் பிராட்மேன் முதலிடத்திலும், 36 இரட்டை சதங்களுடன் வாலி ஹமூண்ட் இரண்டாம் இடத்திலும், 22 இரட்டை சதங்களுடன் பஸ்டி ஹென்ரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அத்துடன் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற ஜாம்பவான் லக்ஷ்மண் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதனால் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இழந்த தன்னுடைய இடத்தை பிடித்து அவர் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- சுனில் கவாஸ்கர் : 25834
- சச்சின் டெண்டுல்கர் : 25396
- ராகுல் டிராவிட் : 23794
- புஜாரா : 19813*
- விவிஎஸ் லக்ஷ்மண் : 19730