ரஞ்சி கோப்பை தொடர் ஒத்திவைப்பு - பிசிசிஐ
இந்தியாவில் கடந்தாண்டு நடைபெற இருந்த ரஞ்சி கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது. இருப்பினும் விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான உள்ளூர் போட்டிகள் குறித்து அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி முக்கிய தொடரான ரஞ்சி கோப்பை தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதிவரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு முன்னதாகவே சயீத் முஷ்டாக் அலி தொடர் அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட வீரர்களுக்கு போதுமான ஓய்வு இருக்காது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனடிப்படையில் ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசனை அடுத்தாண்டு ஜனவரி 05ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதிவரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மேலும் சயீத் முஷ்டாக் அலி தொடரை அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதிவரையும், விஜய் ஹசாரே கோப்பை தொடரை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரையும் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் தொடரின் அட்டவணை:
- மகளிர் அண்டர் 19(ஒருநாள் போட்டி) : செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 18 வரை
- வினோத் மான்கட் கோப்பை (ஆடவர் அண்டர் 19): செப்டம்பர் 20 முதல் - அக்டோபர் 18 வரை
- ஆடவர் செலாஞ்ஜர் கோபை (அண்டர் 19):அக்டோபர் 26 முதல் நவம்பர் 09 வரை
- மகளிர் சேலஞ்ஜர் கோப்பை (அண்டர் 19): அக்டோபர் 25 முதல் நவம்பர் 6 வரை
- சயீத் முஷ்டாக் அலி டி20 தொடர் : அக்டோபர் 27 முதல் நவம்பர் 22 வரை
- சீனியர் மகளிர் ஒருநாள் தொடர் : அக்டோபர் 20 முதல் நவம்பர் 20 வரை
- மாநில ஆடவர் ஏ அணிகளுக்கான ஒருநாள் தொடர் : நவம்பர் 9 முதல் டிசம்பர் 10 வரை
- விஜய் ஹசாரே கோப்பை (ஆடவர் ஒருநாள்): டிசம்பர் 1 முதல் டிசம்பர் 29 வரை
- சீனியர் மகளிர் சேலஞ்ஜர் கோப்பை : நவம்பர் 26 முதல் டிசம்பர் 8 வரை
- ரஞ்சி கோப்பை : ஜனவரி 05 முதல் மார்ச் 20 வரை
- கூச் பெஹார் கோப்பை (ஆடவர் அண்டர் 25): ஜனவரி 6 முதல் ஏப்ரல் 2வரை
- சீனியர் மகளிர் டி20 : பிப்ரவரி 20 முதல் மார்ச் 23 வரை
- விஜய் மெர்சண்ட் கோப்பை (ஆடவர் அண்டர் 19) : நவம்பர் - டிசம்பர்