இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி!
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
இதையடுத்து இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ள வேளையில், இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் அவருடன் தொடர்பிலிருந்து பவுலிங் கோச் பரத் அருண், பீல்டிங் கோச் ஸ்ரீதர், பிசியோ நிதின் படேல், ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இந்திய வீரர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவர்கள் யாருக்கும் தொற்று இல்லாததால், போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
முன்னதாக இந்திய வீரர் ரிஷப் பந்திற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, பிறகு தொற்றிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.