பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!

Updated: Fri, Oct 07 2022 15:02 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ள போதும், பந்துவீச்சு தான் கவலையளித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அனுபவம் குறைந்த இளம் வீரர்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ரவிசாஸ்திரி முக்கிய யோசனை கூறியுள்ளார். அதில், “பும்ரா இல்லாதது துரதிஷ்டவசமானது தான். அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதால் காயம் ஏற்பட்டுவிட்டது. இதில் இனி கவலைக்கொண்டு எந்தவித பயனும் இல்லை. எனவே இதனை மற்றொருவருக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நகர வேண்டும்.

இந்திய அணி முழுமையான பலம் கொண்ட வீரர்களை பெற்றுள்ளது என எனக்கு தோன்றுகிறது. அரையிறுதிக்கு சென்றுவிட்டால் கோப்பையை சுலபமாக வெல்லலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே தொடக்கத்தையும், லீக் சுற்றையும் சிறப்பாக செய்ய வேண்டும். பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் இருக்கும் அணியுடம் பெரும் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும். புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என நினைக்க வேண்டும்” என சாஸ்திரி கூறியுள்ளார்.

தற்போது பெர்த் நகரத்திற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி பெறவுள்ளது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடனும், நியூசிலாந்துடனும் பயிற்சி போட்டிகளில் மோதவுள்ளது. இவை முடிந்தவுடன் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை