ஐபிஎல் 2025: பிராவோ, புவனேஷ்வர் சாதனையை முறியடித்த அஸ்வின்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு சாதனை படைத்துள்ளார். அதன்படி இபோட்டியில் அவர் தனது ஒரே ஓவரில் நேஹல் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ பஞ்சாப் அணிக்கு எதிராக 15 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 18 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரு அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இப்போட்டியில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக புவனேஷ்வர் குமார் 184 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 185 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்
- யுஸ்வேந்திர சஹால் - 206 விக்கெட்டுகள்
- பியூஷ் சாவ்லா - 192 விக்கெட்டுகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் - 185 விக்கெட்டுகள்
- புவனேஷ்வர் குமார் - 184 விக்கெட்டுகள்
இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நேஹால் வதேரே, கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் பிரியான்ஷ் ஆர்யா சதமடித்ததுடன் 103 ரன்களையும், ஷஷாங்க் சிங் 52 ரன்களையும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களைக் குவித்தது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 69 ரன்களையும், ஷிவம் தூபே 42 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 36 ரன்களையும், இறுதியில் அதிரடியாக விளையாடிய எம் எஸ் தோனி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, சிஎஸ்கே அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.