ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை; இந்தியா ஆதிக்கம்!

Updated: Wed, Mar 01 2023 20:34 IST
Ravichandran Ashwin Moves To Number One Spot In The ICC Men's Test Bowling Rankings (Image Source: Google)

நியூசிலாந்து அணிக்கு எதிராக மவுண்ட் மாங்கனியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதையடுத்து, 4 ஆண்டுகளாக ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி 866 புள்ளிகளுடன் ஆண்டர்சன் முதலிடத்துக்கு வந்தார்.

அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் 864 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மொத்தம் 3 விக்கெட்டுகள் மட்டுமே ஆண்டர்சன் எடுத்தாலும் புள்ளிப்பட்டியிலில் முதலிடத்திலேயே இருந்து வந்தார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் இன்று துவங்கியுள்ள பார்டர் - கவாஸ்கர் 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் பந்துவீசி வருகின்றனர். இந்நிலையில், ஐசிசி தனது தரவரிசைப் பட்டியலை புதுப்பித்துள்ளது. இதில், இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

இதில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியளில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் ஆஸ்வின் 864 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேலும், இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஷாகீன் ஷா அஃப்ரிடி முறையே 4ஆவது மற்றும் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். காயம் காரணமாக கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லையென்றாலும் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சோபிக்காததையடுத்து, அவர் 6ஆவது இடத்துக்கு பட்டியலில் இறங்கியுள்ளதால், பும்ரா மற்றும் ஷாகீன் ஷா அஃப்ரிடி ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ளனர். இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜா 8ஆவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இதன்மூலம் இந்திய அணி மற்றும் வீரர்கள் என ஐசிசி தரவரிசைப் பட்டியளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி,

  • நம்பர் 1 ஒருநாள் அணி: இந்தியா (114 புள்ளிகள்)
  • நம்பர் 1 டி20 அணி: இந்தியா (267 புள்ளிகள்)
  • நம்பர் 1 டி20 பேட்டர்: சூர்யகுமார் யாதவ்
  • நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் : ரவிச்சந்திரன் அஸ்வின்
  • நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளர்: சிராஜ்
  • நம்பர் 1 ஆல்ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை