தவானுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; வைரல் காணொளி!

Updated: Wed, Apr 05 2023 21:00 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசனின் 8ஆவது லீக் ஆட்டம் போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ராஜஸ்தானின் கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிமரன் இருவரும் களம் புகுந்தார்கள்.

ஒரு முனையில் தவான் நிதானம் காட்ட மறுமுனையில் இளம் வீரர் பிரப்சிம்ரன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார். போல்ட், அஸ்வின் என்று சீனியர் பந்துவீச்சாளர்களை தாக்கி அதிரடியாக ரண்களை கொண்டு வந்தார். 28 பந்துகளை சந்தித்த அவர் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்தார். ஹோல்டர் வீசிய பத்தாவது ஓவரின் போது பந்தை நேராக தூக்கி அடித்து பட்லரிடம் கேட்ச் கொடுத்து 34 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பஞ்சாப் முதல் விக்கட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.

இந்த ஆட்டத்தின் போது தனது இரண்டாவது ஓவரை வீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை வீச வந்து வீசாமல் நிற்க, அதற்குள் ஷிகர் தவன் கிரீசை விட்டு வெளியே சென்று விட்டார். அஸ்வின் அவரை திரும்பிப் பார்க்க தவான் வேகமாக மீண்டும் கிரிசுக்குள் வந்தார். இப்படியான ரன் அவுட்டுகளை அஸ்வின் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று அவர் தவானை அப்படியே விட்டுவிட்டார்.

அவர் பஞ்சாப் அணிக்கு விளையாடும் பொழுது தற்பொழுது விளையாடி வரும் ராஜஸ்தான் அணியின் பட்லரை இதே முறையில் ஆட்டம் இழக்க வைத்து அது பெரிய சர்ச்சையானது. தற்பொழுது தவானுக்கு எதிராக இப்படி நடக்கும் பொழுது உடனே மைதானத்தில் இருந்த பெரிய திரையில் பட்லரை காட்ட, கிரிக்கெட் கமெண்ட்ரியில் சிரிப்பலைகள் எழுந்தது. மேலும் இக்காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை