ஐசிசி தொடர்களில் அதிக சதம்; சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா!
மைக்கேல் பிரேஸ்வெல்லின் அபார பந்துவீச்சாலும், ரச்சின் ரவீந்திராவின் அபாரமான பேட்டிங்காலும் வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் இப்போட்டியியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்திய ரச்சின் ரவீந்திரா சில் சாதனைகளை படைத்துள்ளார்.
அதன்படி, இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்ததன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். முன்னதாக ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் அவர் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்ததுடன், அத்தொடரில் மூன்று சதங்களைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சதமடித்த நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐசிசி ஒருநாள் தொடர்களில் 34 இன்னிங்ஸ்களில் 3 சதங்களையும், நாதன் அஸ்ட்லே 35 இன்னிங்ஸ்களில் 3 சதங்களையும் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ரச்சின் ரவீந்திரா 11 ஐசிசி ஒருநாள் தொடர் இன்னிங்ஸில் 4 சதங்களைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இப்போட்டியில் சதமடித்த ரச்சின் ரவீந்திரா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களையும் பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த 5ஆவது வீரர் எனும் பெருமையையும் ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான ரவீந்திரா தனது 26ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை டெவான் கான்வே 22 இன்னிங்ஸில் பதிவுசெய்து தந்து பெயரில் வைத்துள்ளார். அவரைத்தொவிர்த்து கிளென் டர்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 24 இன்னிங்ஸ்களிலும், ஆண்ட்ரூ ஜோன்ஸ் 25 இன்னிங்ஸிலும் ஆயிரம் ரன்களை குவித்து முதல் 4 இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி பற்றி பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 77 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜகர் அலி 45 ரன்களைச் சேர்த்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தியதுடன் 112 ரன்களையும், டாம் லேதம் 55 ரன்களையும் சேர்த்ததன் மூலம் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.