சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா!

Updated: Thu, Feb 15 2024 22:07 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ராஜத் பட்டிதார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 200 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சதமடித்து அசத்திய நிலையில் 131 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.

இந்நிலையில் மறுப்பக்கம் ரவீந்திர ஜடேஜா தனது சதத்தைப் பதிவுசெய்யும் முனைப்பில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 82ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்துவிட்டு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியே வந்தார். இதனால் மறுபக்கம் இருந்த சர்ஃப்ராஸ் கானும் ஓட முயற்சித்த நிலையில், ஜடேஜா ஓடுவதை விட்டு பின் வாங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத சர்ஃப்ராஸ் கான் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைய முற்பட்டார். 

ஆனால் அதற்குள் மார்க் வுட் நேரடியை பந்தை ஸ்டம்பில் அடிக்க சர்ஃப்ராஸ் கான் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வந்த சர்ஃப்ராஸ் கானை ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சுயநலத்தினால் ரன் அவுட் செய்துவிட்டார் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் இதனை பார்த்துக்கொண்டிருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது கோபத்தினை வெளிப்படுத்தி இருந்தார். 

அதன்பின் தனது டெஸ்ட் சதத்தை ரவீந்திர ஜடேஜா பதிவுசெய்ததுடன், இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 110 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். இந்நிலையில் சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்து ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைராலாகி வருகிறது. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "என்னுடைய தவறான அழைப்பால் அவுட் ஆனதற்கு வருந்துகிறேன். சிறப்பாக விளையாடினீர்கள் சர்பராஸ் கான்" என பதிவிட்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை