இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை நீங்க இதை செய்ய வேண்டும் - தினேஷ் கார்த்திக்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாக அமைந்த போதும், மிடில் ஆர்டர் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரின் டாப் ஆர்டரில் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் ஏமாற்றியதால் சொற்ப ரன்களுக்கு இந்திய அணி அவுட்டானது. கடைசி ஒருநாள் போட்டியில் கூட தீபக் சஹாரால் இந்திய அணி தப்பித்தது.
இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினையை தீர்க்க தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், ரவீந்திர ஜடேஜா 6ஆவது வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடுகிறார். 5ஆவது வீரராக கூட அவரால் சோபிக்க முடியும். ஏனென்றால் அவர் தனது மூளையை பயன்படுத்தி விளையாடுகிறார், சிறுபிள்ளைகளை போல இஷ்டத்திற்கு சுற்றமாட்டார்.
ரன்களை உயர்த்துவது மட்டுமின்றி ஜடேஜாவால் கடைசி வரை நின்று வெற்றி பெற்றுக்கொடுக்கவும் முடியும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜடேஜா தற்போது டேஞ்சரஸ் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். அவர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்படுவதே மிடில் ஆர்டர் பிரச்சினையை தீர்க்க சரியான வழி என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா நீண்ட நாட்களாக ஓய்வெடுத்து வருகிறார். அடுத்ததாக வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ஜடேஜா சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் அவர் குணமாக இன்னும் ஒன்றரை மாதம் ஆகலாம் எனத்தெரிகிறது.