சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்; சாதனைப் பட்டியளில் ரவீந்திர ஜடேஜா! 

Updated: Fri, Sep 15 2023 19:53 IST
சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்; சாதனைப் பட்டியளில் ரவீந்திர ஜடேஜா!  (Image Source: Google)

இலங்கையில் நடைபெற்று வரும் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் போர் சுற்றின் கடைசி போட்டியானது இன்று கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியானது ஷாகிப் அல் ஹசன், தாஹித் ஹிரிடோய் ஆகியோரது அபாரமான ஆட்டம் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களையும், தாஹித் ஹிரிடோய் 54 ரன்களௌயும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.அந்த வகையில் இன்றைய போட்டியில் பத்து ஓவர்கள் வீசிய ரவீந்திர ஜடேஜா 1 மெய்டன் உட்பட 53 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் வங்கதேச வீரரான ஷமீம் ஹுசேன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி ஷமீம் ஹுசேன் விக்கெட்டை அவர் வீழ்த்திய போது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த இந்திய வீரராக ஏழாம் இடத்தினையும் அவர் பிடித்துள்ளார். நட்சத்திர தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் கூட நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தி ஜடேஜா அசத்தியுள்ளார். 

இதற்கு முன்னதாக இந்திய அணி சார்பாக அணில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், அஜித் அகார்கர், ஜாஹீர் ஜான், ஹர்பஜன் சிங், கபில்தேவ் போன்ற வீரர்கள் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் அவர்களை தொடர்ந்து இன்றைய போட்டியில் ஜடேஜா எடுத்த ஒரு விக்கெட்டின் மூலம் 7ஆவது இந்திய வீரராக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டவது இந்திய வீரர் எனும் சாதனையையும் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தியுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மட்டுமே இச்சாதனையை படைத்திருந்தார். அதனைத் தற்பொது ரவீந்திர ஜடேஜா சமன்செய்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 182 போட்டிகளில் பங்கேற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை