ஜடேஜாவை இது புண்படுத்தியிருக்கலாம் - காசி விஸ்வநாதன்!
நடந்து முடிந்த 16 வது சீசன் ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி, அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை வைத்திருந்த மும்பை அணியின் சாதனையைச் சமன் செய்தது. இதற்கு முந்தைய வருட ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தனிப்பட்ட முறையில் மிக மோசமான செயல்பாட்டை கொண்டு இருந்து நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
அந்த வருட ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் ஜடேஜா கேப்டனாக இருக்க மகேந்திர சிங் தோனி வழிவிட்டு தாமாக நகர்ந்தார். ஆனால் தொடரின் நடுப்பகுதியில் மீண்டும் மகேந்திர சிங் டோனி கேப்டனாக வர ஜடேஜா அணியை விட்டு வெளியேறி இருந்தார்.
இதனால் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனைகள் போய்க்கொண்டிருப்பதாக செய்திகள் பரவின. அதற்கேற்றார் போல் ஜடேஜாவின் நடவடிக்கைகளும் அமைந்தன. மேலும் நடப்பு தொடரில் ரசிகர்கள் தோனிக்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகை பிடித்ததும், அதற்கு ஜடேஜா தன்னுடைய வருத்தத்தை வெளிப்படையாக ட்விட்டரில் காட்டியதும் நடந்தது.
தற்பொழுது இது குறித்து வெளிப்படையாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ஜடேஜாவை பொறுத்தவரை அவர் மிகச் சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங்கில் மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் விளையாடி முடிக்கும் பொழுது, அவருக்குப் பத்து அல்லது பதினைந்து பந்துகள் மட்டுமே கிடைப்பதற்கு வாய்ப்பு இருந்தது.
இப்படியான நிலையில் சிலநேரம் ஆட்டம் நல்ல முறையில் அமையும். சில நேரம் நல்ல முறையில் அமையாது. இவருக்கு அடுத்து தோனி விளையாட வருவார் என்று அவருக்கும் தெரியும். ரசிகர்கள் தோனி மீது கொண்ட அன்பின் காரணமாக இவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகைப் பிடித்தது இவரைப் புண்படுத்தி இருக்கலாம். அவர் இது குறித்து ட்வீட் செய்து இருந்தாலும் கூட, எங்களிடம் எதையும் புகாராக வருத்தமாகக் கூறவில்லை.
மேலும் டெல்லி அணிக்கு எதிரான கடைசிப் போட்டியின் போது நான் மைதானத்தில் ஜடேஜா உடன் பேசியதும் மகேந்திர சிங் தோனி ஆட்டம் முடிந்து அவருடன் பேசியதும், ஆட்டத்தின் ஒரு பகுதியான வழக்கமான விஷயங்கள்தான். தனிப்பட்ட முறையில் அங்கு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
ஜடேஜா எப்பொழுதும் தோனி மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். அவர் இறுதியாக ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை மகேந்திர சிங் தோனிக்கு அர்ப்பணிப்பதாக சொன்னதிலிருந்தே நாம் இதைப் புரிந்து கொள்ள முடியும்” என்று தெஇரிவ்த்துள்ளார்.