‘எனது தந்தையின் பேட்டி முற்றிலும் பொய்யானது’; மனைவிக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா கருத்து!

Updated: Fri, Feb 09 2024 14:48 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் இந்திய அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 69 டெஸ்ட், 197 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடி 6ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 553 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசயில் முதலிடத்தில் ஜடேஜா நீடித்து வருகிறார். 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய ஜடேஜா, மூன்றாவது மற்றும் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் நீடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங், அவரது மருமகள் ரிவாபா ஜடேஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், ரவீந்திர ஜடேஜா திருமணமாகி சில மாதங்களிலேயே எங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், நனும் ரவீந்திர ஜடேஜாவும் பேசி சில ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இதற்கு காரணம் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தான் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 

அனிருத் சிங்கின் இந்த குற்றச்சாட்டுகள் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது மனைவிக்கு ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது அந்த பதிவில், எனது தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றும், அது முற்றிலும் முட்டாள் தனமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அந்த நேர்காணலில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களும் அர்த்தமற்றவை மற்றும் பொய்யானவை. ஒரு தரப்பின் கருத்து மட்டுமே கூறப்பட்டுள்ளது, அதை நான் மறுக்கிறேன். எனது மனைவியின் நற்பெயரை கெடுக்கும் முயற்சிகள் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது மற்றும் அநாகரீகமானது. நான் அதை பகிரங்கமாக சொல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஜடேஜாவின் தந்தையின் இந்த பேட்டி வெளிவந்ததில் இருந்து, சமூக ஊடகங்கள் இரு தரப்பிலும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதாவது ஒரு தரப்பினர் ஜடேஜாவின் தந்தையையும் , மற்றொரு தரப்பினர் ஜடேஜாவையும்  தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை