ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியானது இந்த ஐபிஎல் தொடரில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ராஜத் படிதர், தேவ்தத் படிக்கல் மற்றும் டிம் டேவிட் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், குர்னால் பாண்டியா உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
எஞ்சியுள்ள வீரர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவது கடினமாகும். இருப்பினும் அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அவர்களின் சொந்த மைதானமான சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று சொந்த மைதானத்திலும் ஆதிக்கம் செலுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
மறுபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் போட்டிகளில் அந்த அணி சிறப்பான ரன் ரேட்டில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று குறித்து நினைக்க முடியும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இருப்பினும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் காயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் மற்ற பேட்டர்களும் சோபிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேசமயம் அணியின் பந்துவீச்சில் ஜோஃப்ர் ஆர்ச்சருடன் இணைந்து வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா உள்ளிட்டோர் ரன்களைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில் அந்த அணி வெற்றியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 33
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 16
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 14
- முடிவில்லை - 03
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரஜத் படிதார், வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (துணை கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, குர்னால் பாண்டியா, ரியான் பராக்
- பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர்.