இனி தான் அவருக்கு சவாலே காத்திருக்கிறது - ஷுப்மன் கில் குறித்து சபா கரீம் கருத்து!
நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில், அதனை தொடர்ந்து நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய சர்வதேச முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான ஷுப்மன் கில் அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இவர் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார்.
ஒரு நாள் போட்டிகளில் நல்ல பார்மில் இருக்கும் இவர் நிச்சயம் எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா அணியின் முன்னாள் வீரர் சபா கரீம், இந்திய அணியின் சிறந்த வீரராக உருவெடுத்துள்ள சுப்மன் கில்லுக்கு அறிவுரையுடன் கூடிய பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சபா கரீம், “திறமையை வைத்து பார்த்தால் ஷுப்மன் கில் சிறந்த வீரராக தெரிகிறார். ஆனால் உண்மையை சொல்லப்போனால் தற்பொழுது தான் அவருக்கு உண்மையான பலப் பரிட்சை துவங்கப் போகிறது, தற்போது எதிரணி பந்துவீச்சாளர்கள் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான யோசனைகளையும் யுக்திகளை மேற்கொண்டு வருவார்கள்.
இது நிச்சயம் கில்லுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கபோகிறது. கில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிப்பாவே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறந்த முறையில் விளையாடினார். பொறுமையாகவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்தும் சிறப்பாக செயல்பட்டார் ஆனால் இது பலம் வாய்ந்த எதிரணிக்கு எதிராக எப்படி செயல்பட போகிறது என்பதுதான் உண்மையான பரிசோதனையே” என்று தெரிவித்துள்ளார்.