தோல்வியடைந்தது பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இப்போட்டியில் தோல்வியடைந்தது பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் எங்கள் அணி வீராங்கனை போராடிய விதத்தைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். அடுத்த போட்டியில் விளையாட எங்களுக்கு 2 நாள்கள் உள்ளன, என்ன தவறு நடந்தது என்பதைப் பற்றி யோசிப்போம். இத்தொடரில் முதல் முறையாக நாங்கள் பேட்டிங் செய்தோம்.
எனவே இன்று விஷயங்களைப் பற்றி நாங்கள் மிகவும் விமர்சன ரீதியாக இருக்க மாட்டோம். அடுத்த 2 நாட்களில் எங்களுக்கு நேர்மறையாக இருப்பது முக்கியம். இந்த மைதானத்தில் பந்து நன்றாக வந்து கொண்டிருந்தது, அவுட்ஃபீல்ட் நிச்சயமாக வேகமாக இருந்தது, மேலும் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் கொஞ்சம் உதவியது. பந்துவீச்சை பொறுத்தவரையில் பவர்பிளேயில் நாங்கள் நன்றாகத் தொடங்கினோம்.
ஹீலி மேத்டூஸ் அவுட் ஆன பிறகு, எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நினைத்தோம், மிடில் ஓவர்களில் அதை கடினமாக்கினோம், நாங்கள் எப்போதும் விளையாட்டில் இருப்பதாக உணர்ந்தோம்” என்று தெரிவித்துள்ளார். இப்போட்டி குறித்து பேசினால், இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 11 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 86 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் அமஞ்சோத் கவுர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 42 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்ஜோத் கவுர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், ஜி கமலினி 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.