ZIM vs NED, 2nd ODI: வில்லியம்ஸ், கிளைவ் அரைசதம்; ஸிம்பாப்வேவுக்கு 272 டார்கெட்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் எர்வின் - மதெவெரே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தது. இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எர்வின் 39 ரன்களிலும், மதெவெரே 43 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேரி பேலன்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் ஒரு பக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்தி வீரர்கள் சிக்கந்தர் ரஸா, ரியான் பார்ல் இணை அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் வில்லியம்சன்னுடன் கிளைவ் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் தொடரந்து அபாரமாக செயல்பட்டு அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சீன் வில்லியம்சன் 77 ரன்களில் ஆட்டமிழக்க, 52 ரன்களை சேர்த்திருந்த கிளைவ்வும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 49.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களில் ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாரிஸ் அஹ்மத் 5 விக்கெட்டுகளையும், வான் மீகெரென், ஆக்கர்மேன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.