ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்; பிசிசிஐ புதிய திட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் போது இந்திய அணி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டி20 போட்டிகளுக்கு மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தயாராக வேண்டும் என்று முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மார்ச் முதல் மே வரை நடைபெறும், ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களை சிகப்பு பந்து பயிற்சிகளில் ஈடுபட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதனால் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சிகளில் இடபட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது.
பிசிசிஐயின் புதிய திட்டம் என்ன?
இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, பிசிசிஐ வீரர்களை சிவப்பு-பந்து பயிற்சி அமர்வுகளில் பங்கேற்க அல்லது ஐபிஎல்லின் போது சில சிறப்பு டெஸ்ட் கிரிக்கெட் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நடைமுறையை பிசிசிஐ எவ்வாறு செயல்படுத்தும் மாற்றும் இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பயிற்சி ஏன் அவசியம்?
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக, ஐபிஎல் முடிந்து இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்லும் போதெல்லாம், இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. இதுதவிர்த்து சமீபத்தில் கூட இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், அதன்பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரையும் இழந்துள்ளதால், பிசிசிஐ இந்த புதிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்குப் பிறகு துபாயில் பிசிசிஐ அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மார்ச் 9 ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் ஐபிஎல் தொடங்கும், எனவே அடுத்த சில நாட்களில் இந்த திட்டம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.