இந்திய அணியில் மீண்டும் சச்சின்; பிசிசிஐயின் புது முயற்சி!
இந்திய அணி தற்போது 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.
அவர்களுக்கு மேலும் பலத்தை கூட்ட தான் இந்திய அணியின் ஜாம்பவான்களை பயிற்சியாளர்களாக நியமித்து வருகிறது பிசிசிஐ.
ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பெரும் முயற்சிகளை எடுத்திருந்தார். முதலில் டிராவிட் அதற்கு மறுத்த நிலையில் பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தார். இதே போல தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விவிஎஸ் லக்ஷ்மணிடமும் பெரும் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்புக்கொள்ள வைத்தார்.
இந்நிலையில் ஜெய் ஷா அடுத்ததாக சச்சின் டெண்டுல்கரை அனுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 வயதில் இந்திய அணிக்கு அறிமுகமாக உலக நாடுகளே கொண்டாடும் அளவிற்கு திகழ்பவர் சச்சின். இவர் சர்வதேச அளவில் 34,000 ரன்களுக்கும் மேல் விளாசியுள்ளார். இவரை இந்திய அணியின் ஏதேனும் ஒரு உயர் பதவிக்கு நியமிக்க ஜெய் ஷா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்திய அணியில் தற்போது தலைமை பயிற்சியாளர், பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்து துறைகளுக்கும் தனித் தனியாக பயிற்சியாளர்கள் உள்ளனர். எனவே சச்சின் டெண்டுல்கரை ஆலோசகராக ( Mentor) நியமிக்க வாய்ப்புகள் உள்ளது. விராட் கோலி, புஜாரா, ரகானே போன்ற வீரர்கள் பேட்டிங்கில் சரியான ஃபார்மில் இல்லாத போது சச்சினின் அட்வைஸ்கள் அவர்களுக்கு உதவலாம். மேலும் டிராவிட் - சச்சின் கூட்டணியில் இந்திய அணி பெரும் உயரத்திற்கு செல்லலாம்.
சச்சின் தற்போது ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஒருவேளை ஜெய் ஷா அவரை சம்மதம் தெரிவிக்க வைத்துவிட்டால், சச்சின் தனது விருப்பமான மும்பை அணியில் இருந்து விலகி வர வேண்டிய சூழல் உருவாகும். ஏனென்றால் ஒரே நேரத்தில் 2 பதவி வகிக்க கூடாது என்பது தான் பிசிசிஐ விதி என்பது குறிப்பிடத்தக்கது.