ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் - வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஐபிஎல்லில் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.
கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், ரஷீத் கான் போன்ற பெரிய வீரர்கள் சிலர் கழட்டிவிடப்பட்டனர். கேஎல் ராகுல் பஞ்சாப் அணியிலிருந்து அவராகவே விலகினார். டேவிட் வார்னர் சன்ரைசர்ஸிலிருந்து விலகினார். ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி விடுவித்தது.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து டெல்லி அணியில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், 2 சீசன்களாக அந்த அணியை கேப்டன்சியும் செய்தார். காயத்தால் அவர் ஆடமுடியாததால், 2021ஆம் ஆண்டு சீசனின் முதல் பாதியில் ரிஷப் பந்த் கேப்டன்சி செய்ய, ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு வந்தபிறகும், ரிஷப்பையே கேப்டனாக தொடரவைத்தது டெல்லி அணி. அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிருப்தியடைந்தார்.
இந்நிலையில் தான், டெல்லி அணியிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயரை புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளில் ஒன்று, கேப்டன்சிக்காக எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 2 முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற கேகேஆர் அணி, கம்பீருக்கு பிறகு கேப்டன் சரியாக செட் ஆகாமல் தவித்துவரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கும் பொருட்டு அவரை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேகேஆர் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் கோப்பையை வென்று கொடுத்த கம்பீர், கேகேஆர் அணியிலிருந்து விலகியபிறகு, தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் ஈயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனாலும் எந்த கேப்டனும் கேகேஆருக்கு சரியாக செட் ஆகவில்லை. எனவே ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை கேகேஆர் அணி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.