இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இவரை நியமிக்கலாம் - ரிக்கி பாண்டிங் கருத்து!

Updated: Mon, Jan 31 2022 18:09 IST
Image Source: Google

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. 

வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகாலம் கேப்டனாக இருக்கக்கூடிய வீரரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சில முன்னாள் வீரர்கள், ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அதுவெல்லாம் சரியாக வராது. ரோஹித்தைத்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் திடமாக கூறுகிறார்கள்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங்,“ரோஹித் சர்மாவையே அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம். ஆனால் கேப்டன்சியை பிரித்து கொடுக்க பிசிசிஐ நினைக்கிறதா என்று தெரியவில்லை. பிசிசிஐ திட்டம் என்னவென்று தெரியவில்லை. அனைத்து ஃபார்மட்டுக்கான அணிக்கும் ஒரே கேப்டனை நியமிக்கிறதா அல்லது வெவ்வேறு கேப்டன்களை நியமிக்க நினைக்கிறதா என்பது பிசிசிஐக்குத்தான் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை