லங்கர் ராஜினாமா; கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை விமர்சித்த பாண்டிங்!
ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 4-0 என வென்றது.
கடந்த 2018ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கடினமான அச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். 51 வயது லாங்கர் ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தபோதும் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும், ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலிய அணி வென்றதால் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டும் லாங்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பியது. இதை ஏற்றுக்கொள்ளாத லாங்கர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜூன் மாதத்துடன் லாங்கரின் பதவிக்காலம் முடிவடைகிறது. தன்னுடைய ஒப்பந்தத்தை நீண்ட காலத்துக்கு நீட்டிக்க லாங்கர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ஆஸ்திரேலிய அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ராஜினாமா விவகாரம் குறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இன்று சோகமான நாள். திரும்பிப் பார்த்தால் கடந்த ஆறு மாத காலமாக எதுவும் சரியாக அமையவில்லை. ஜஸ்டின் லாங்கர், டிம் பெயின் விவகாரங்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கையாண்ட விதம் சங்கடம் அளிக்கும் விதத்தில் உள்ளது.
இப்படியொரு நாள் வரும் என்பதால் தான் டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ், லாங்கருக்கான தனது ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்படி அவர் ஆதரவு அளித்திருந்தால் லாங்கரைத் தாண்டி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் நகர்ந்திருக்க முடியாது. லாங்கர் என்னுடைய நெருங்கிய நண்பர். இப்படித்தான் நடக்கும் என்பதை முன்பே நான் உணர்ந்திருந்தேன்” என்று தெரிவித்தார்.