இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
இந்திய மாநிலங்களில் கிரிக்கெட்டில் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலம் அசாம். அப்படியான ஒரு சிறிய கிரிக்கெட் மாநிலத்திலிருந்து வந்திருக்கக்கூடிய இளம் வீரர்தான் ரியான் பராக். தற்போது 21 வயதையே எட்டியிருக்கும் ரியான் பராக் இதுவரை 5 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார்.
தற்போது 21 வயதான இவர் 2019 ஆம் ஆண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பதினாறாவது வயதில் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதற்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உச்சபட்சமாக சென்று 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 3.80 கோடி கொடுத்து மீண்டும் வாங்கிக் கொண்டது. அந்த அளவிற்கு இவர் மீது அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருக்கிறது.
ஆனால் ஐந்து வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான இவருடைய செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வாங்கிக் கொண்டது மட்டும் அல்லாமல் விளையாடவும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கும்.
அதன்படி இதுவரை 54 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்து 600 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரையிலும் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் இவர் கடந்த ஆண்டில் சிக்ஸர் அடிப்பது சாதாரணம் என்பது போல ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்க, நெட்டிசன்கள் மொத்தமாக இவர் மேல் பாய்ந்து விட்டார்கள். மேலும் இவரது ஐபிஎல் செயல்பாடும் சுமாராக இருந்ததால், இவர் மீதான கேலி கிண்டல்கள் சமூக வலைதளத்தில் எக்கச்சக்கமாக இருந்தது.
இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் ரியான் பராக் கூறுகையில், “நான் எல்லா வகையான பந்துகளையும் மிக நன்றாக வீசி வருகிறேன். மேலும் நான் வலது கை மட்டுமல்லாது தற்பொழுது இடது கையிலும் பந்து வீச பயிற்சி எடுத்து வருகிறேன். நான் வீசாத பந்துகள் என்று எதுவுமே கிடையாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்த சீசனில் மட்டும் அனைத்து வடிவத்திலும் சேர்த்து நான் 350 ஓவர்கள் பந்து வீசி 40க்கும் மேற்பட்ட விக்கட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். இந்த முறை நான் ஐபிஎல் தொடரில் 10 பந்துகளைக் கூட வீசவில்லை என்பது உண்மைதான்.
கோல்ஃப் விளையாடுவதும் ஆன்லைனில் கேமிங் விளையாடுவதும் என்னை கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைக்கிறது. நான் கோபமாக இருக்கும் நேரத்தில் அதை சரி செய்வதற்கு கோல்ஃப்தான் கை கொடுக்கிறது. கிரிக்கெட்டில் அதை செய்ய முடியாது. இப்படி கிரிக்கெட்டுக்கு வெளியே மனதை செலுத்தி கோபங்களை தணித்து, மீண்டும் வந்து விளையாடும்போது நான் சரியாகவும் ரசித்தும் விளையாடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தியோதர் கோப்பை தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடிவரும் ரியான் பராக் அடுத்தடுத்து சதங்களை விளாசியதுடன் அணியை இறுதிப்போட்டிக்கும் அழைத்துசென்றுள்ளார். அதன் காரணமாக ஏற்பட்டுள்ள நம்பிக்கையில் இதுபோன்று அவர் பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.