பிபிஎல் 2022: ஹாபர்ட் ஹரிகேன்ஸிடம் போராடி தோல்வியடைந்தது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் அணி முதலில் பேட்டிங் செய்ய் தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் டி ஆர்சி ஷார்ட் 5 ரன்களிலும், கலெப் ஜெவெல் 8 ரன்களிலும், சதாப் கான் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜிம்மி நீஷமும் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய டிம் டேவிட், டிம் பெய்ன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நாதன் எல்லிஸ் மட்டும் 21 ரன்களைச் சேர்த்திருந்தார். இதனால் 18 ஓவரிக்களிலேயே ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. ரெனிகேட்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன், டேவிட் மூடி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ரெனிகேட்ஸ் அணியில் கேப்டன் நிக் மேடின்சன், சாம் ஹார்பர், ஜேக் ஃபிரசெர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, நட்சத்திர வீரர் ஆரோன் ஃபிஞ்சும் 13 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதனைத்தொடர்ந்து வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், நாதன் எல்லிஸ், அகீல் ஹோசைன் ஆகியோரும் விக்கெட்டை இழக்க, கடைசி வரை போராடிய வில் சதர்லேண்ட் 29 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதனால் 19.2 ஓவர்களில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹாபர்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் ரைலி மெரிடித், சதாப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.