டெத்-ஓவர் பந்துவீச்சு, எங்கள் பேட்டிங் ஆகியவற்றில் நாங்கள் மேம்பட வேண்டும் - ரிஷப் பந்த்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.
இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் செஃபெர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். அதிலும் குறிப்பாக ரொமாரியோ செஃபெர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்து 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களை குவித்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்ஸர் படேல், நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ப்ரித்வி ஷா - அபிஷேக் போரல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் பிரித்வி ஷா 66 ரன்களில் பெவிலியன் திரும்ப, அபிஷேக் போரல் 41 ரன்களில் நடையைக் கட்டினார். இதனையடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் 8 ரன்னிலும் லலித் யாதவ் 3 ரன்னிலும் குமார் குஷாக்ரா 0 ரன்னிலும் வெளியேறினர்.
இப்போட்டியில் கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், “நிச்சயமாக நாங்கள் இந்த போட்டியில் வெற்றிபெறும் தருணத்தில் இருந்தோம், ஆனால் பவர்பிளேயில் எங்களிடம் இருந்து போதுமான ரன்கள் வரவில்லை. குறிப்பாக நீங்கள் இவ்வளவு பெரிய ஸ்கோரைத் துரத்தும்போது பவர்பிளே ஓவர்களில் நீங்கள் ரன்களை குவிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
இருப்பினும் அடுத்த சில ஓவர்களில் நாங்கள் நன்றாக பேட் செய்தோம், ஆனால் தொடர்ந்து ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது எளிதானது அல்ல. இன்றைய போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதுபோன்ற தவறுகள் சில நேரங்களில் நடக்கும். பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சில் மொதுவாக பந்துவீசுவது மற்றும் வேரியஷன்களை பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.
ஆனால் இன்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அதனை செய்ய தவறிவிட்டனர். பந்துவீச்சாளர்கள் எப்போதும் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு பந்துவீச வேண்டும். டெத்-ஓவர் பந்துவீச்சு மற்றும் எங்கள் பேட்டிங் போன்ற சில பகுதிகளில் நாங்கள் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த போட்டியில் சிறப்பாக திரும்பி வருவோம் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.