இன்னும் 100% குணமடையவில்லை - ரிஷப் பந்த்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.
காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு துபாயில் இன்று நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை தக்க வைத்துள்ளதால் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் ஐபிஎல் தொடருக்குள் ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டி பயிற்சியினை மேற்கொண்டு களத்திற்கு திரும்புவாரா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். இந்நிலையில் வேகமாக குணமடைந்து வரும் தாம் இன்னும் 100% குணமடையவில்லை என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருந்ததை விட தற்போது நான் நன்றாக குணமடைந்துள்ளேன். இருப்பினும் இன்னும் நான் 100% முழுமையாக குணமடைவதற்கான பயணத்தில் இருக்கிறேன். ஆனால் அடுத்த 2 மாதங்களுக்குள் அதை நான் செய்து முடிப்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.