IND vs ENG, 3rd ODI: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதுகுறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராகுலுக்குப் பதில் பந்த்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டார். அவர் 2 போட்டிகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது தவிர, கடந்த ஐந்து ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவர், 21, 31, 00, 02, மற்றும் 10 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடி வீரர் ரிஷப் பந்திற்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங் விளையாட வாய்ப்பு
அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அபாரமாக செயல்பட்டு வரும் அர்ஷ்தீப் சிங் இப்போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவேளை அர்ஷ்தீப் சிங் இடம்பெறும் பட்சத்தில் முகமது ஷமி அல்லது ஹர்ஷித் ரானா ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு கட்டாக்கில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட் மைட்டுமே வீழ்த்தியதுடன் 10 ஓவர்களில் 54 ரன்களையும் கொடுத்திருந்தார். இதனால் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்/ரிஷப் பந்த், அக்சர் படேல், ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி/குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா/அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.