தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவரை சேர்த்தது ஏன்? ரசிகர்கள் கேள்வி!
ஆசியக் கோப்பை 2022 சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆசியக் கோப்பை லீக் சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கியபோது தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் ஒரு ரன் எடுத்தபோது இந்தியா வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டும் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்தியா வெற்றியைப் பெற்றது. அடுத்து சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக தினேஷ் கார்த்திக்கு மாற்றாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார். ரிஷப் பந்த் அதிரடி பேட்டர் என்பதால், இவரை களமிறக்கியது தவறே இல்லை. மாறாக தீபக் ஹூடாவை டெத் பேட்டராக சேர்த்ததுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீபக் ஹூடா பந்துவீசக் கூடியவர்தான். அந்த காரணத்திற்காகவும் ரோஹித் இவரை தேர்வு செய்யவில்லை. ஆம், கடந்த இரண்டு போட்டிகளிலும் இவர் ஒரு பந்தைகூட வீசவில்லை. டெத் ஓவர்களில் அதிரடி காட்ட தினேஷ் கார்த்திக்கு மாற்றாகத்தான் சேர்க்கப்பட்டார். இவர் வழக்கமாக மூன்றாவது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டக் கூடியவராக இருக்கும் நிலையில், தேவையில்லாமல் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு தீபக் ஹூடாவை டெத் பேட்டராக சேர்த்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஒருவேளை தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் அல்லது இலங்கைக்கு எதிரான ஏதோ ஒரு போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி ரன்களை குவித்திருப்பார். கடந்த காலங்களில் இதனை அசால்ட்டாக செய்திருக்கிறார். அவரை நீக்கியதுதான் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னே முட்டுக்கட்டையாக இருக்கிறது எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றப் பிறகு தீபக் ஹூடாவை ஏன் சேர்த்தீர்கள் என நெறியாளர் அதிரடியாக கேட்டபோது, ‘‘இலங்கை அணியில் அதிகமாக இடது கை பேட்டர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு எதிராக தீபக் ஹூடாவால் சிறப்பாக பந்துவீச முடியும். இருப்பினும், வலது கை பேட்டர்கள் அதிக நேரம் விளையாடியதால், துரதிருஷ்டவசமாக தீபக் ஹூடாவுக்கு ஓவர்களை வழங்க முடியவில்லை” எனக் கூறி ரோஹித் சமாளித்தார்.
ஒருவேளை அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் காட்டடி அடித்தால், அது நிச்சயம் ரோஹித் கேப்டன்ஸிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.