ENG vs IND, 5th Test: சதமடித்து மிரட்டிய ரிஷப் பந்த்!
இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது போட்டி.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா கொரோனா காரணமாக ஆடாததால், ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஷுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷுப்மன் கில் (17) மற்றும் புஜாரா (13) ஆகிய இருவரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஹனுமா விஹாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் மேட்டி பாட்ஸின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயரும் 15 ரன்னில் நடையை கட்டினார்.
98 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. அதன்பின்னர் ரிஷப் பந்துடன் ஜடேஜாவும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் செய்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ரிஷப் பந்த் சதமடிக்க அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் அரைசதத்தைக் கடந்தார். இதன் மூலம் இருவரும் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தார்.
அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ரிஷப் பந்த் 150 ரன்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 111 பந்துகளில் 4 சிக்சர், 20 பவுண்டரிகளுடன் 146 ரன்களில் ஆட்டமிழந்தார்.