தோனியுடன் பந்தை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர்!

Updated: Wed, Jul 06 2022 19:01 IST
Image Source: Google

சமீபமாக அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக வலம் வந்த இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பேட்டிங்கில் சரியான முறையில் விளையாடுவதில்லை. அடித்து ஆட வேண்டும் என்று தன்னுடைய விக்கெட்டை இழந்து விடுகிறார் என்று விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அனைவருடைய விமர்சனத்தையும் தவிடுபொடியாக்கும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான விடுபட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக செயல்பட்டு தன்னுடைய திறமையை தெரியப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 89 பந்துகளில் சதத்தை கடந்த ரிஷப் பந்த் மொத்தம் 146 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அதற்குப்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தும் அசத்தியுள்ளார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் ஒரு படி முன்னேறியிருக்கும் ரிஷப் பந்தை பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில்இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகருமான சஞ்சய் மஞ்சரேக்கர் ரிஷப் பன்ட் தோனியை போல் முன்னேறி வருகிறார் என்று பாராட்டி பேசியுள்ளார் .

இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், “எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் ரிஷப் பந்த் தன்னை ஒரு சிறந்த வீரர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அடித்து ஐந்து சதங்களில் ஒன்று மட்டுமே இந்தியாவில் அடித்துள்ளார். மற்ற அனைத்துமே வெளிநாட்டு மைதானங்களில் அடித்து அசத்தியுள்ளார். ஆனால் தற்பொழுது நான், அவருடைய விக்கெட் கீப்பிங் குறித்து தான் பேசப்போகிறேன்.

அவருடைய பேட்டிங் குறித்து அனைவரும் பேசி விட்டனர். அவர் தன்னுடைய பொறுப்பை மிகவும் தீவிரமாக உணர்ந்து செய்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட பின்பும் எதையும் அலட்சியமாக கருதாமல் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். அவருடைய விக்கெட் கீப்பிங் மிகவும் அருமையாக உள்ளது. குறிப்பாக இது போன்ற ஒரு கண்டிஷன்களில் மிக சிறப்பாகவே உள்ளது. ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் வளர்ந்து வருவது இந்திய அணிக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். 

ஸ்டம்புக்குப் பின்னால் இருந்து வெறும் வாய் பேச்சு மட்டுமில்லாமல் தன்னுடைய பொறுப்பை மிகவும் தீவிரமாக செய்கிறார். இவருடைய முன்னேற்றம் தோனியை போல அபரிவிதமாக உள்ளது. விக்கெட் கீப்பராக அவர் முன்னேறி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செய்து விட்டோம் என்பதால் விக்கெட் கீப்பிங் அலட்சியம் காட்டும் பலரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ரிஷப் பந்த் அது போன்று செய்யாமல் சிறப்பாக செயல்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை