சாலை பாதுகாப்பு உலக டி20: இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

Updated: Sat, Mar 20 2021 10:46 IST
Image Source: twitter

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களைக் கொண்டு நடத்தப்பட்டு வரும், சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இத்தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி, தென்ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, தென்ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் வேன் வைக் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணிக்கு உதவினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சரிவர சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக வேன் வைக் 53 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் குலசேகரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் தில்சன் (18), ஜெயசூர்யா (18) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த உபுல் தரங்கா - சிந்தக ஜெயசிங்க இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. 

இதனால் 17.2 ஓவர்களிலேயே இலங்கை லெஜண்ட்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உபுல் தரங்கா 39 ரன்களையும், சிந்தக ஜெயசிங்க 47 ரன்களையும் சேர்த்தனர். 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி நாளை நடைபெறவுள்ள சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை