பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி!

Updated: Tue, Oct 11 2022 15:51 IST
Roger Binny Top Contender For The Post Of BCCI President (Image Source: Google)

கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபரில் பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. 

எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி  போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளார். இதையடுத்து அக்டோபர் 18இல் நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்குழுவில் பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வாகவுள்ளார். 

பொருளாளர் பதவிக்கு பாஜகவைச் சேர்ந்த ஆஷிஷ் ஷெலார் போட்டியிடவுள்ளார். இன்றும் நாளையும் பிசிசிஐ பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்பவர்கள் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் தலைவராக உள்ள பிரிஜேஷ் படேல், விரைவில் 70 வயதை அடையவுள்ளதால் அவரால் அப்பதவியில் தொடர முடியாது. அப்பதவிக்கு அருண் துமால் போட்டியிடவுள்ளார். 

திங்களன்று அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவர்களுடனான கூட்டத்தை நடத்தியுள்ளது பிசிசிஐ. ஐந்து முக்கியமான பதவிகளில் போட்டியிடுபவர்கள் குறித்த விவாதம் இந்தக் கூட்டத்தில் நடைபெற்றது. பிசிசிஐ தேர்தல் அக்டோபர் 18 அன்று நடைபெறவுள்ளது. 

2019 முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள பின்னி, பிசிசிஐயின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1983இல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பின்னியும் இடம்பெற்றிருந்தார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அப்போட்டியில் அடைந்தார். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 72 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ராஜீவ் சுக்லா துணைத் தலைவர் பதவியையும் ஜெய் ஷா செயலாளர் பதவியையும் தக்கவைத்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

பிசிசிஐயின் முக்கியமான பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள்

  • தலைவர்: ரோஜர் பின்னி
  • துணைத் தலைவர்: ராஜீவ் சுக்லா
  • செயலாளர்: ஜெய் ஷா
  • இணை செயலாளர்: தேவஜித் சைகியா
  • பொருளாளர்: ஆஷிஷ் ஷெலார்
  • ஐபிஎல் தலைவர்: அருண் துமால் 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை