சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) தினேஷ் கார்த்திக் 19 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 68 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஸ்னோய் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்ததன் மூலம் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். அவர் 21 ரன் எடுத்து இருந்த போது சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார். 31 அரை சதங்களுடன் அவர் முதல் இடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் விராட் கோலி (30 அரை சதம்). 3ஆவது இடத்தில் பாபர் அசாம் (27). 4ஆவது இடத்தில் டேவிட் வார்னர் (23). குப்தில் (22) அரை சதம் அடித்து 5ஆவது இடத்தில் உள்ளார்.