ஜெய்ஸ்வால், பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!

Updated: Mon, Feb 05 2024 15:35 IST
ஜெய்ஸ்வால், பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 399 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. 

இப்போட்டியில் அபாரமாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்குபின் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, வெற்றிக்கு காரணமாக இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யஷஸ்வி ஜெய்வாலை பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஜஸ்ப்ரித் பும்ரா எங்கள் அணியின் சாம்பியன் வீரர். இதுபோன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து வருகிறார். நாங்கள் இப்போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம் என நினைக்கிறேன். இதுபோன்ற மைதானங்களில் நீங்கள் டெஸ்ட் போட்டியை வெல்வது அவ்வளவு எளிது கிடையாது. இந்த போட்டியை பந்துவீச்சாளர்கள் முன்னின்று எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறினேன். அவர்களும் அதனை சரியாக செய்து முடித்துள்ளனர். 

இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. ஏனெனில் இப்போட்டியில் பேட்டர்கள் சிறப்பான தொடக்கங்களை பெற்றபோதும் அவர்களால் பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஆடுகளத்தின் தன்மையையும் புரிந்து விளையாடினார். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார் என நம்புகிறேன்.

அணியில் இடம்பிடித்திருந்த மற்ற வீரர்களும் பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமில்லாதவர்கள். அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க போதிய அவகாசம் கொடுக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது மிகவும் முக்கியம். அப்போது தான் அவர்கள் எந்த அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாட முடியும். இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரானது எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். நாங்கள் எங்களது தவறுகளை சரிசெய்து அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவுசெய்வோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை