கியிலின் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்டாக 3 இரட்டை சதங்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளதால் இன்று இந்தியாவின் 3 வகையான அணிகளுக்கு முழு நேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடிக்காத அவர் இன்று கேப்டனாக சொந்த மண்ணில் தேசத்தை வழி நடத்த உள்ளார். முன்னதாக தொடக்க வீரராக அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் போன ரோஹித் சர்மா சிக்ஸர்களை பறக்க விடுவதில் வல்லவராக இருக்கிறார். குறிப்பாக எதிரணி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை அசால்டாக புல் ஷாட் வாயிலாக சிக்சர் அடிக்கும் அவர் இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முறையே 77, 280, 182 என மொத்தம் 539 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் உலக அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரராக ஏற்கனவே சாதனை படைத்துள்ள அவர் இன்னும் 14 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை (553) முந்தி புதிய சரித்திரம் படைப்பார். இந்நிலையில் கிறிஸ் கெயிலின் அந்த சாதனையை உடைக்க விரும்புவதாக தெரிவிக்கும் ரோகித் சர்மா ஆரம்ப காலங்களில் அதைப்பற்றி கனவில் கூட நினைத்ததில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் கிறிஸ் கெயிலின் சிக்ஸர்கள் சாதனையை உடைக்க விரும்புகிறேன். ஆனால் அவருடைய சாதனையை முடிக்க முடியும் என்று என்னுடைய வாழ்நாளில் நான் நினைத்ததில்லை. அது மிகவும் தனித்துவமான சாதனையாக இருக்கும். ஏனெனில் என்னிடம் கட்டுமஸ்தான உடம்பு கிடையாது. ஆனால் நான் பந்தை மிகவும் கடினமாக அடிக்க விரும்புவேன். கிரிக்கெட்டை விளையாட துவங்கிய போது அது மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள்.
ஆனால் ஏரியல் ஷாட்களை நீங்கள் அடிக்க கூடாது என்று எங்களுடைய பயிற்சிகள் எச்சரிக்கை கொடுப்பார்கள். மேலும் உங்களுடைய தலையை சரியாக வைத்து பேட்டை உடலுக்கு அருகே கொண்டு பந்துக்கேற்றார் போல விளையாட வேண்டும் என்பதே சிக்ஸர்கள் அடிப்பதற்கான அடிப்படையாகும். இருப்பினும் ஆரம்ப காலங்களில் அதைப் பின்பற்றி அடித்தாலும் எங்களுடைய பயிற்சியாளர்கள் போட்டியிலிருந்து நீக்கி விடுவார்கள்” என்று கூறினார்.
அப்படி கொஞ்சம் தவறினால் அவுட்டாகக்கூடிய சிக்சர்களை நல்ல பயிற்சி மற்றும் திறமைகளால் அசால்டாக அடித்து சாதனை படைத்து வரும் ரோஹித் சர்மா நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை தொடர் முடிவதற்குள் இன்னும் 14 சிக்சர்கள் அடித்து அந்த உலக சாதனை உடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். அதற்காக ஹிட்மேன் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.