நாங்கள் மோசமாக விளையாடவில்லை - ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகள் நிறைவடைந்து இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இதில் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நிறைவடைந்த நிலையில் ரோஹித் சர்மா அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய அணி டி20 போட்டிகளில் மோசமாக விளையாடவில்லை என்றார்.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, “ நாங்கள் உலகக் கோப்பையை வெல்லவில்லை. அதனால் டி20 போட்டிகளில் நாங்கள் மோசமாக விளையாடுகிறோம் என அர்த்தமில்லை. கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி 80 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. மோசமாக விளையாடினால் எப்படி இத்தனைப் போட்டிகளில் ஜெயிக்க முடியும்.
வீரர்கள் அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு அந்த சுதந்திரத்தைக் கொடுத்துள்ளோம். அப்போதுதான் அவர்களது சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டு அணிக்கு வெற்றி என்பது கிடைக்கும். சில நேரங்களில் ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமானதாக அமையாது. அதனால், வீரர்கள் மோசமாக விளையாடுகிறார்கள் என கூறிவிட முடியாது” என்றார்.