WPL 2023: கனிகா, எல்லிஸ் அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ஆர்சிபி!

Updated: Wed, Mar 15 2023 22:58 IST
Image Source: Google

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் கடந்த 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், நடந்து முடிந்த 5 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக மும்பை அணி பிளே ஆஃப் சுற்று முன்னேறியுள்ளது. இதற்கு மாறாக 5 போட்டிகளிலும் தோல்வி கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு கடைசி வாய்ப்பாக இன்றைய போட்டியில் களமிறங்கியது.

யுபு வாரியர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் காரணமாக யுபி வாரியர்ஸ் அணியில் அலைஸா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா இருவரும் களமிறங்கினர். இதில், வைத்யா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர் அலைஸா ஹீலியும் ஒரு ரன்னில் வெளியேறினர்.

பின்னர், தஹ்லியா மெக்ராத் 2 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஓரளவு ரன்கள் சேர்த்த கிரண் நவ்கிரே, 22 ரன்கள் சேர்த்த நிலையில் நடையை கட்டினார். தொடர்ந்து, சிம்ரன் ஷேக் 2 ரன்னிலும் வெளியேறினார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து யுபி வாரியர்ஸ் அணி தடுமாறியது. அப்போது தான் தீப்தி ஷர்மா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடி ரன்கள் குவித்தனர். எனினும், தீப்தி ஷர்மா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று கிரேஸ் ஹாரிஸ் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இவர், 46 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த ஷ்வேதா செராவத் 6 ரன்களும், ஷோஃபி எக்லிஸ்டோன் 12 ரன்களும், அஞ்சலி சர்வானி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக் யுபி வாரியர்ஸ் 19.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் எல்லீஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளும், ஆஷா ஷோபனா மற்றும் ஷோஃபி டிவைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அதன்பின் சோபி டிவைன் 14 ரன்களிலும், எல்லிஸ் பெர்ரி 10 ரன்களிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹீதர் நட்டும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கனிகா அவுஜா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதன்மூலம் ஆர்சிபி அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் தங்களது அடுத்தடுத்த தோல்விகளுக்கும் ஆர்சிபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்க்து. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை