அடுத்தடுத்து சதங்களை விளாசும் புஜாரா; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இந்திய அணியின் சீனியர் டெஸ்ட் வீரரான புஜாரா இந்திய அணிக்காக இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,792 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் நியூசிலாந்து என உலகெங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் முக்கிய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் திகழ்ந்து வருகிறார்.
ஆனாலும் இயல்பாகவே மிகவும் பொறுமையாக விளையாடும் தன்மையுடைய புஜாராவிற்கு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாற்றம் தான் இருந்து வருகிறது. அவரது பேட்டிங் ஸ்டைலே மிகவும் பொறுமையாக விளையாடுவது தான் என்றாலும் அவரது ஆட்டம் இந்திய அணியில் பெரியதாக எடுபடவில்லை.
அதே வேளையில் ஐபிஎல் தொடரிலும் அவருக்கு எந்த அணியிலும் வாய்ப்பு கிடைக்காத வேளையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக விளையாடும்போது சற்று சுமாராகவே விளையாடி வரும் இவர், தற்போது லண்டனில் நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாடி வரும் புஜாரா ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்த வேளையில் தற்போது இந்த சீசனில் மூன்றாவது சதத்தை சசெக்ஸ் அணிக்காக அடித்து அசத்தியுள்ளார்.
மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சசெக்ஸ் அணி அல்சப் - சட்டேஷ்வர் புஜார ஆகியோரது சதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களைக் குவித்தது. அதில் அல்சப் 189 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, புஜாரா 90 பந்துகளைச் சந்தித்து 132 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மில்டிசெக்ஸ் அணியில் ஜோ கிராக்னெல்லைத் தவிர மற்ற யாரும் சோபிக்க வில்லை. இதில் ஜோ கிராக்னெல் மட்டும் அரைசதம் கடந்ததுடன், 71 ரன்களையும் சேர்த்தார்.
இதனால் 38.1 ஓவர்களிலேயே மிடில்செக்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சசெக்ஸ் அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் மிடில்செக்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
அதேசமயம் புஜாரா இப்படி கவுன்டி கிரிக்கெட்டில் ஒரே சீசனில் 3 சதங்களை அடித்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.