ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி நடையை தொடர்ந்து வருகிறது. அதேசமயம் தொடரை வெற்றியுடன் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து குஜராத் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலம் வருகிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் ஜொலித்து வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை அளித்து வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அணியின் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் தொடர்ந்து ரன்களை குவித்து வருகின்றனர். அதேசமயம் முதல் 3 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த ஜோஸ் பட்லர் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசி பார்முக்கு திரும்பி இருக்கிறார்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் தொடர்ந்து சொதப்புகிறார். இதுவரை 4 போட்டிகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர்களுடன் துருவ் ஜூரெல், ஹெட்மையர் போதுமான பங்களித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். மறுபக்கம் அணியின் பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பெர்கர், யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் அந்த அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்து தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷனும், பந்து வீச்சில் மொஹித் சர்மா, உமேஷ் யாதவ், நூர் அஹ்மத் போன்றோர் சிறபான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் நட்சத்திர வீரர்கள் டேவிட் மில்லர், விருத்திமான் சஹா ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் வில்லியம்சன், விஜய் சங்கர், ரஷித் கான் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்களது முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனால் இன்றைய போட்டியில் இதுவரை வாய்ப்பை பெறாத மேத்யூ வேட், ஷாரூக் கான், அபினவ் மனோகர் போன்ற வீரர்கள் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், கேன் வில்லியம்சன்/மேத்யூ வேட், விஜய் சங்கர்/அபினவ் மனோகர், பி.ஆர்.ஷரத் /ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அஹ்மத், மோஹித் ஷர்மா (இம்பாக்ட் பிளேயர்).