‘எங்கு சென்றார் ரன் மெஷின்’ சதமடிக்காமல் 50-ஐ தொட்ட விராட் கோலி!
விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இன்று 7 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார் கோலி. இதற்கு முந்தைய டெஸ்டுகளிலும் 0, 42, 20 என ரன்கள் எடுத்தார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 எனக் கடைசியாக விளையாடிய 50 இன்னிங்ஸிலும் ஒரு சதமும் அடிக்க முடியாமல் உள்ளார் விராட் கோலி. இப்படியெல்லாம் நடக்கும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்?
டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் எடுத்துள்ள கோலி, கடந்த இரண்டு வருடமாக ஒரு சதம் கூட எடுக்க அடிக்கமுடியாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக, 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தார் கோலி. அதற்குப் பிறகு விளையாடிய 50 இன்னிங்ஸிலும் அவர் ஒரு சதமும் எடுக்கவில்லை. அதற்கு முன்பு தொடர்ச்சியாக 25 இன்னிங்ஸில் தான் சதமடிக்காமல் இருந்துள்ளார்.
இதற்கு முன்பு இரு தருணங்களில் மட்டுமே நீண்டநாளாக சதமடிக்காமல் இருந்துள்ளார்.
- 50 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை
- 25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014
- 24 இன்னிங்ஸ் - பிப். 2011 - செப். 2011
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் இதுநாள்வரை ஒரு சதத்தைக்கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கும் பேராதிர்ச்சியாக இருந்துவருகிறது.