ரன் அவுட்டான அல்ஸாரி ஜோசப்; சர்ச்சைய கிளப்பிய நடுவரின் முடிவு!

Updated: Sun, Feb 11 2024 21:35 IST
ரன் அவுட்டான அல்ஸாரி ஜோசப்; சர்ச்சைய கிளப்பிய நடுவரின் முடிவு! (Image Source: Google)

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு  இடையேயான மூன்று போட்டியில் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்களை குவித்தது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் 55 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சகள் என 120 ரன்களை விளாசி தள்ளினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவெல் 63 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 37 ரன்களையும் எடுத்திருந்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது களநடுவர் கொடுத்த தீர்ப்பு ஒன்று பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனெனில்  இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். அதில் அல்ஸாரி ஜோசப் பந்தை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது அந்த திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டிம் டேவிட் பந்தை எடுத்து ஜான்சனிடம் வீசினார். அவரும் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்தார்.

ஆனால், பந்துவீச்சாளர் உட்பட எந்தவொரு ஆஸ்திரேலிய வீரரும் அதற்கு அவுட் கோரி கள நடுவரிடம் முறையீடு செய்யவில்லை. இதையடுத்து இந்த காட்சி மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. அப்போது ஜான்சன் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடிக்கும் போது அல்ஸாரி ஜோசப் கோட்டிற்கு வெளியே இருந்தது தெளிவாக தெரிந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவர் ரன் அவுட் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் களநடுவர் அந்த ரன் அவுட்டிற்கு எந்தவொரு முறையீட்டையும் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்யவில்லை என்பதால், அதற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஆனல் அதற்கு நடுவரோ, நீங்கள் ரன் அவுட்டிற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் கிரிக்கெட் விதிமுறைகளின் படி அல்ஸாரி ஜோசப்பிற்கு ரன் அவுட் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

இதனால் அல்ஸாரி ஜோசப் மீண்டும் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவமானது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இருப்பினும் கிரிக்கெட் விதிமுறைகளின் படி ஒரு அணியின் வீரர்கள் மேல்முறையீடு செய்யப்படும் வரை, எதிரணி வீரர் அவுட்டாக இருந்தாலும், அதற்கான தீர்ப்பை நடுவர்கள் வழங்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை