ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் சாதனைகளை நிகழ்த்திய ரஸ்ஸல்!
ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க வீரர் சுப்மன் கில் 7 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் 8/1 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சஹா உடன் இணைந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு பொறுப்பாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த இந்த ஜோடியில் ரித்திமான் சஹா 25 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக 27 (20) ரன்கள் எடுத்து அவுட்டாகி சென்றார்.
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 67 (49) ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் 156/9 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதை தொடர்ந்து 157 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் சம் பில்லிங்ஸ் 4 (4) சுனில் நரேன் 5 (5) நிதிஷ் ராணா 2 (7) கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 12 (15) என டாப் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் 34/4 என தடுமாறிய அந்த அணிக்கு அதிரடி காட்டிய இளம் வீரரின் ரிங்கு சிங் 4 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 35 (28) ரன்களில் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரும் 17 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
இதனால் 98/6 என தடுமாறிய கொல்கத்தாவின் தோல்வி உறுதியான நிலையில் களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி நேரத்தில் தமக்கே உரித்தான பாணியில் பட்டாசாக சிக்சர்களை பறக்க விட்டு கொல்கத்தாவின் வெற்றிக்கு போராடினார். அவருக்கு உறுதுணையாக உமேஷ் யாதவ் 15* (15) ரன்கள் எடுக்க மறுபுறம் குஜராத்துக்கு பயத்தை காட்டிய ரஸ்ஸல் வெறும் 25 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 48 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பிற்கு அழைத்து சென்றார்.
குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் சிக்சர் அடித்த அவர் 2ஆவது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் கொல்கதாவின் வெற்றியும் அதோடு பறிபோனது. இறுதியில் 20 ஓவர்களில் 148/8 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா போராடி தோற்றது. இதனால் 8 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து அந்த அணி புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த போட்டியில் கொல்கத்தா தோற்ற போதிலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 48 ரன்கள் விளாசி தனி ஒருவனாக போராடிய அன்ரே ரஸ்ஸல் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதிலும் 151/6 என்ற நிலையில் குஜராத் இருந்தபோது கடைசி ஓவரை முதல் முறையாக வீசிய அவர் முதல் 2 பந்துகளில் அபிநவ் மனோகர் 2 (4) லோக்கி ஃபெர்குசன் 0 (1) என அடுத்தடுத்து அவுட் செய்து அடுத்த 2 பந்துகளில் ஒரு சிங்கிள் ஒரு பவுண்டரி கொடுத்தார். ஆனால் கடைசி 2 பந்துகளில் ராகுல் திவேத்தியா 17 (12) யாஷ் தயாள் 0 (1) என மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்த அவர் வெறும் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து குஜராத்தை கடைசி நேரத்தில் கட்டுப்படுத்தினார்.
1. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சரித்திர சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்தார். இதற்கு முன் லசித் மலிங்கா போன்ற எந்த வேகப்பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்ததில்லை.
2. அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனையையும் பகிர்ந்து கொண்டார். அந்தப் பட்டியல் இதோ:
- அமித் மிஸ்ரா: 4 (புனேவுக்கு எதிராக, 2013)
- யுஸ்வென்ற சஹால் : 4 (கொல்கத்தாவுக்கு எதிராக, 2022)
- ஆண்ட்ரே ரசல் : 4 (குஜராத்க்கு எதிராக, 2022*)
3. அதேபோல் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த போது குறைந்த ரன்களை கொடுத்த வீரர் என்ற அபார சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
- ஆண்ட்ரே ரசல் : 5* ரன்கள்
- ரோஹித் சர்மா : 6 ரன்கள்
- ட்வயன் ஸ்மித் : 8 ரன்கள்
மேலும் இந்த போட்டியில் 6 சிக்சர்களையும் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளையும் 6 சிக்சர்களையும் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங்க்கு பெற்றார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக யுவராஜ் சிங் 4 விக்கெட்டுகளையும் 6 சிக்ஸர்களையும் எடுத்தார்.